EBOOK

About

இதற்குமுன் நான் எழுதியுள்ள புது மெருகு என்ற புத்தகத்தைப் போன்றது இது. சங்க நூல்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டு பின்னிய வாலாறுகளும், பிற காலத்துச் சதகங்களிலும் தனிப்பாடல்களிலும் உள்ள செய்திகளைக் கொண்டு உருவாக்கிய கதைகளும், கேள்வியினால் தெரிந்தவற்றை ஆதாரமாகக் கொண்ட கதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

தமிழ்ப் புலவர்கள் தம்முடைய கவித்திறத்தினாலே செய்த செயல்களை ஒவ்வொரு வரலாற்றிலும் காணலாம். அந்தச் செயல்களுக்கு உரம் தந்தது, புலவர்களிடத்தில் இருந்த தமிழ் இவ்வரலாறுகளில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழின் ஆற்றலை வெளிப்படுத்துவன. ஆகவே இதற்கு "எல்லாம் தமிழ்"என்ற பெயர் வைத்தேன்.

ஒரு நாட்டின் பெருமையைத் தெளிவதற்கு இத்தகைய வரலாறுகள் சிறந்த ஆதாரங்களாக விளங்குகின்றன.

கதிரவன் இன்னும் வானத்தில் எழவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அவன் தன் செங்கதிர்களைப் பரப்பி உலகத்தில் பவனி வரப் புறப்பட்டுவிடுவான். உலகம் விழித்துக்கொண்டது. இயற்கைத் தேவி மலராலும் புள்ளினங்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தாலும் கதிரவனை வரவேற்க ஆயத்தமாக இருக்கிறாள். புல்லுக்கும் பூவுக்கும், மரத்துக்கும், மண்ணுக்கும், புனலுக்கும் புள்ளினத்துக்கும் பொலிவு தரும் நாயகன் அல்லவா அவன்? மக்கள் அனைவரும் துயில் நீங்கி வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க முனையப் போகின்றனர். ஆடவரும் மகளிரும் நீராடி இறைவனை வழிப்பட்டு இல்லற ஒழுக்கங்களில் ஈடுபடப் போகின்றனர்.

அந்த மடமங்கையும் என்றும் போல அன்றும் எழுந்தாள். ஆற்றுக்கு நீராடச் சென்றாள். குடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மென்கொடி அலசி நடப்பதுபோல நடையிட்டுச் சென்றாள்.

Related Subjects

Artists